Thursday, January 5, 2012

ஆஸ்திரேலியாவில் வேண்டா வெறுப்பாக விளையாடும் இந்திய அணி: மார்க் வா


சிட்னி: இந்திய அணியின் ஆட்டம் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. அவர்கள் மோசமாக பேட்டிங் செய்துள்ளனர். களத்தில் ஏதோ வேண்டா வெறுப்பாக விளையாடுவது போல் தெரிகிறது என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மார்க் வா தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் தொடர் தற்போது சிட்னியில் நடந்து கொண்டிருக்கிறது. 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. 2வது போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 468 ரன்கள் லீட் பெற்ற நிலையில், இந்தியா 2வது இன்னிங்ஸ் ஆடி வருகின்றது.

இந்த நிலையில் இந்திய கேப்டன் டோணி ஒரு சிறந்த தற்காப்பு கொண்ட கேப்டன் என்று முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் மார்க் வா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

இந்திய அணியின் ஆட்டம் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. அவர்கள் மோசமாக பேட்டிங் செய்துள்ளனர். களத்தில் ஏதோ வேண்டா வெறுப்பாக விளையாடுவது போல் தெரிகிறது. டோணி ஒரு சிறந்த டிஃபென்சிவ் கேப்டன். அவர் எதிரணியினர் தவறு செய்யும் வரை பொறுமையாகக் காத்திருக்கக் கூடியவர். அதை நான் பல முறை கவனித்துள்ளேன்.

இந்திய அணி தனது மனப்பாங்கை மாற்றிக் கொள்ள வேண்டும். அவர்கள் இந்தியாவில் அருமையாக விளையாடுகிறார்கள். ஆனால் நெளிநாடுகளில் சிறப்பாக விளையாடும் அணிகளின் தரவசரிசையில் 8வது இடத்தில் தான் உள்ளனர்.

கடந்த 3 முதல் 4 மாதங்களாக அணியை விட்டு நீக்கும் பயத்தில் சிக்கி தவித்து வந்த ரிக்கி பான்டிங் ஓரிரு அரைசதங்களை மட்டுமே அடித்திருந்தார். ஆனால் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பான்டிங் சதமடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பான்டிங் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். அவரை மற்ற கிரிக்கெட் வீரர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது பான்டிங் தரம் குறைந்த வீரராக தெரியலாம். ஆனால் 2வது டெஸ்ட் போட்டியில் பான்டிங் சிறப்பாக பேட்டிங் செய்தார்.

பான்டிங் அடித்த சதத்தின் மூலம் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை விலகும் என்று கருதுகிறேன். சதமடித்து நிம்மதி அடைந்துள்ள பான்டிங், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை குவிப்பார் என்றார்.
 


0 comments:

Post a Comment