Thursday, January 12, 2012

ஆஸி.யில் குடியேறுவோரிடம் வியர்வை நாற்றம் சகிக்கவில்லையாம்-கூறுகிறார் பெண் எம்.பி.!

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்குக் குடியேறி வரும் வெளிநாட்டவர்களுக்கு வியர்வை நாற்றத்தைத் தடுப்பது எப்படி என்பது குறித்து சொல்லித் தரப்பட வேண்டும். மேலும் அவர்கள் டியோடரென்டுளை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்று பேசி வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் எம்.பி. தெரசா கம்போரா என்பவர்.

ஆஸ்திரேலியன் என்ற இழுக்கு அவர் இதுதொடர்பாக அளித்த பேட்டி ஒன்றில்,

ஆஸ்திரேலியாவில், ஆஸ்திரேலிய மக்கள் என்னென்ன பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதை இங்கு வந்து குடியேறும் வெளிநாட்டவருக்கு நாம் புரிய வைக்க வேண்டும். வரிசையில் நிற்பது எப்படி என்பது உள்பட அனைத்தையும் நாம் சொல்லித் தர வேண்டியுள்ளது.

பொது சுகாதாரம், உடல் சுகாதாரம் உள்ளிட்டவை குறித்து நாம் அவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும். சக ஊழியர்களுடன் நெருக்கமாக நின்றபடி பணியாற்ற வேண்டியிருக்கும்போது நமது உடல் சுகாதாரம் குறித்து வெளிநாட்டவர்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பொது போக்குவரத்துகளைப் பயன்படுத்தும்போது, மற்றவர்களுடன் பயணிக்கும்போது அவர்களுக்கு சிரமம் தராத வகையில், வியர்வை நாற்றத்தைத் தடுக்கும் டியோடரென்டுகளைப் பயன்படுத்துவது குறித்தும் நாம் அவர்களுக்குப் போதிக்க வேண்டும்.

ஆஸ்திரேலிய மக்களும் இதில் கவனமாக இருக்க வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாதவர்களுக்கு அவர்கள்தான் சொல்லித்தர வேண்டும். நமக்குப் பக்கத்தில் பயணிப்பவர் குறித்தும் நாம் மனதில் கொள்ள வேண்டும் என்று பேசியிருந்தார் தெரசா.

தெரசாவின் இந்தப் பேச்சுக்குக் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதுகுறித்து பல்வேறு கலாச்சாரங்களுக்கான நாடாளுமன்ற விசாரணைக் குழுவின் தலைவரான எம்.பி. மரியா வம்வகினோ கூறுகையில், காமெடித்தனமாக இருக்கிறது தெரசாவின் பேச்சு. சிறந்த நகைச்சுவையாளர்களையே அவர் மி்ஞ்சி விட்டார் என்றார்.

ஈழத் தமிழரும், ஆஸ்திரேலியக் குடிமகனுமான ரமேஷ் பெர்னாண்டஸ் கூறுகையில், குரங்குகளைப் போல குடியேறிகளை நடத்த நினைக்கிறார் தெரசா. பிற நாடுகளிலிருந்து இங்கு வந்து குடியேறும் மக்களை பலவிதங்களிலும் அவமானப்படுத்தவே இந்த நாடு நினைக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது என்றார்.

ஆஸ்திரேலிய குடியேற்றத் துறை அமைச்சர் கிறிஸ் போவன் தெரசாவின் கருத்து குறித்துக் கூறுகையில், கம்போராவின் கருத்து மிகவும் மோசமானது, அறிவிலித்தனமானது. இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகள் 1952ல் இருந்தால் அது நியாயம், ஆனால் இது 2012 என்பதை தெரசா புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

தெரசாவின் கருத்துக்கள் விக்கிபீடியாவிலும் இடம் பெற்றிருந்தன. ஆனால் சில மணி நேரங்களிலேயே அதை சிலர் அகற்றி விட்டனர். மேலும் தெரசாவின் தொழில் அக்குளை மோர்ந்து பார்ப்பது என்றும் குசும்புத்தனமாக போட்டு வைத்துள்ளனர்.

தனது கருத்துக்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார் தெரசா. இவரது பெற்றோரே இத்தாலியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment