Tuesday, December 27, 2011

உச்சிதனை முகர்ந்தால்

இலங்கை ராணுவத்தினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் 13 வயது தமிழ்ச்சிறுமி, தாயுடன் இந்தியா வந்து சேர்கிறாள். சமூக ஆர்வலர் சத்யராஜ், அச் சிறுமிக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுக்கிறார். சிறுமியைப் பரிசோதிக்கும் டாக்டர், கர்ப்பமாக இருக்கும் விஷயத்தைச் சொல்ல, அனைவருக்கும் அதிர்ச்சி.  தாய், கர்ப்பத்தைக் கலைக்கச் சொல்கிறார். முடியாத நிலையில், தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். இதையறிந்த சங்கீதா, தற்கொலை முடிவை மாற்றுகிறார். வயிற்றில் வளரும் குழந்தையுடன் வலம் வரும் சிறுமியின் தந்தை, ராணுவத்தால் கொல்லப்பட, அதை மகளிடம் சொல்லாமல் இலங்கைக்கு செல்கிறார் தாய். சத்யராஜும், சங்கீதாவும் சிறுமியை காக்கின்றனர். இந்நிலையில், சங்கீதா கர்ப்பமாகிறார். அவரைப் பார்க்க வரும் அம்மா, சிறுமியின் கர்ப்பத்தைக் கண்டு அதிர்ந்து, சத்தம் போடுகிறார். தன்னால்தானே பிரச்னை என்று வருந்தும் சிறுமி, யாரிடமும் சொல்லாமல், வெளியேறுகிறார். அவளை திருநங்கை ஒருவர் காப்பாற்றுகிறார். பிறகு  அவளுக்கு பாலியல் நோய் இருப்பது தெரியவர, முடிவு என்ன என்பது மனதை உருக்கும் கிளைமாக்ஸ்.

அதிர வைக்கும் பரிதாபத்துக்குரிய சிறுமி வேடத்தில் வரும் நீநிகா, படத்தின் நாயகி. வெடிச்சத்தம் கேட்டும், விமானம் பறப்பதைப் பார்த்தும், தன்மீது குண்டு வீசுகிறார்கள் என்று நினைத்து பயப்படும்போது, கரைய வைக்கிறார். பிஞ்சு வயிற்றில் கர்ப்பத்தைச் சுமந்துகொண்டு, வீட்டிலுள்ள செல்லப்பிராணிக்கு பெயரிட்டு கொஞ்சுவதாகட்டும், தோட்டத்துக்கு நீர்ப்பாய்ச்சி ரோஜாக்களை வளர்ப்பதாகட்டும், புறாக்களுக்கு தீனி போடுவதாகட்டும் ஒவ்வொரு காட்சியிலும் பரிதாபத்தை அள்ளுகிறார். அவரது இலங்கைத்தமிழ்ப் பேச்சு, இனிக்கிறது. இந்தியாவுக்கு பாஸ்போர்ட், விசா இல்லாமல் தேடி வந்த சிறுமிக்கும், அவளது தாயாருக்கும் அடைக்கலம் கொடுக்கும் தம்பதியராக சத்யராஜ், சங்கீதா மனதில் நிற்கின்றனர். நீநிகாவின் கர்ப்பம் தெரிந்ததும் தானே அவளுக்கு இன்னொரு தாயாக மாறும் சங்கீதாவின் நடிப்பு யதார்த்தம். போலீசாக வரும் சீமான், டாக்டர்களாக வரும் நாசர், லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் ஆட்டோ டிரைவர் அருள்மணி மனதில் பதிகிறார்கள்.

பி.கண்ணன், அழகிய மணவாளனின் ஒளிப்பதிவு கைகொடுத்துள்ளது. இமான் இசையில் ‘உச்சிதனை முகர்ந்தால்’ பாடல் இனிய மெலடி. தமிழருவி மணியனின் வசனங்கள், நறுக். தமிழர்கள் படும் அவஸ்தையை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர். என்றாலும், 13 வயது சிறுமிக்கு தான் கர்ப்பமான விஷயம் தெரியாதா என்ன? சிறுமியை பரிசோதிக்கும் டாக்டர்கள், ஆரம்பத்திலேயே அவளுக்கு நோய் இருப்பதைக் கண்டறியாதது எப்படி என்பது உட்பட எழும் ஏராளமான கேள்விகளை விட்டுவிட்டுப் பார்த்தால் உச்சிதனை முகரலாம்


0 comments:

Post a Comment