Saturday, December 24, 2011

போலி நகைகளை அடகு வைத்து நட்சத்திர ஓட்டல்களில் உல்லாசம்

சென்னை : ஆவடி நேரு பஜாரில் அடகு கடை நடத்தி வருபவர் மகாவீர் சந்த் ஜெயின் (50). இவரிடம் தங்க நகை செய்யும் தொழிலாளிகளான திருவள்ளூர் கிருஷ்ணா நகரை சேர்ந்த பாஸ்கரன் (42), பட்டாபிராம் தேவராஜபுரம் பஜனை கோயில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் (38). ஆகியோர், அடிக்கடி நகைகளை அடகு வைத்து பணம் பெற்று சென்றனர். கடந்த 8 மாதத்தில் மட்டும் 50 சவரன் நகைகளை அடமானம் வைத்து, ரூ.6 லட்சம் வரை பெற்று சென்றிருக்கின்றனர். அடகு வைத்த நகைகளை  மீட்க வரவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் இருவரும் அடகு கடைக்கு வந்தனர். மேலும், 4 சவரன் நகையை அடகு வைத்து ரூ.42 ஆயிரம் வாங்கினர். ஏற்கெனவே வைக்கப்பட்ட நகைகளை மீட்காமல், மேலும் நகைகளை அடகு வைத்ததால் 2 பேர் மீதும் மகாவீர் சந்த் ஜெயினுக்கு சந்கேகம் வந்தது. உடனடியாக, 4 சவரன் நகைகளை கம்ப்யூட்டர் மிஷின் மூலம் சோதனை நடத்தினார். அது போலியானது என்று தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மகாவீர் சந்த் ஜெயின், ஏற்கனவே அடகு வைத்திருந்த நகைகளையும் சோதனை செய்தார். அவைகளும் போலியானவை என்று தெரிய வந்தது.

இதையடுத்து, ஆவடி போலீசில் மகாவீர் சந்த் புகார் செய்தார். அம்பத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 ஆசாமிகளையும் தேடினர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், வெங்கடேசன், பாஸ்கரன் ஆகியோரரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில். பாஸ்கரன், வெங்கடேசன் 2 பேரும் கூட்டாளிகளுடன் சேர்ந்து கவரிங் கடையில் நகைகளை வாங்கி உள்ளனர்.

பின்னர், அதை தங்க மூலாம் பூசி, 916 கேடிஎம் நகை என்று முத்திரை குத்துவார்கள். மேலும், ஆவடியில் உள்ள பிரபல நகைக்கடை பெயரையும் அச்சிட்டுள்ளனர். அதை கொஞ்சம் கொஞ்சமாக அடகு கடையில் வைத்து பணம் பெற்றுள்ளனர். அந்தப் பணத்தில் பாஸ்கரன், வெங்கடேசன் தங்களது நண்பருடன் பல இடங்களுக்கு சென்று பெண்களுடன் உல்லாசமாகவும், நட்சத்திர ஓட்டல்களுக்கு சென்று மது விருந்திலும் கலந்து கொண்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 916 கேடியம் முத்திரை, பிரபல நகை கடை முத்திரையை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், 2 பேரையும் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


1 comments:

  1. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.

    ஆனாலும் சேட் இவ்வளவு வெள்ளந்தியாக இருந்திருக்கக் கூடாது.

    ReplyDelete